சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்..!
சித்திரை திருவிழாயொட்டி மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.
மதுரை,
சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று இரவு யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா இன்று (30-ந் தேதி) நடைபெறுகிறது. இன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.
அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.