சித்திரை திருவிழா தொடக்கம்
சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன்பிறகு விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி திருக்கல்யாணமும், 5-ந்தேதி வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கனகலெட்சுமி தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.