சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பறவைகள் சரணாலயம்
திருப்பத்தூர் அருகே திருப்பத்தூர்-மதுரை சாலையில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் சுமார் 40 எக்டர் நிலப்பரப்பு கொண்டதாகும். இந்த கண்மாயில் உள்ள மரங்களில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தனது குஞ்சுகளோடு இருப்பிடத்திற்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான இலங்கை, தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வந்து அடைகாத்தல் செய்து தனது இனப்பெருக்கத்தை அதிகரித்து செல்லும்.
சேதமடைந்த பூங்கா
தற்போது சீசன் காலமாக உள்ளதால் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்துள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து இங்குள்ள பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி சரணாலத்திற்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்த நிலையில் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் இங்குள்ள சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளது.
மேலும் இங்கு பறவைகளை அருகில் நின்று பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பால் ஆன உயர் கோபுரம் சில இடங்களில் சேதமான நிலையில் உள்ளதால் அதில் சுற்றுலா பயணிகள் ஏறுவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் இங்கு வனத்துறை சார்பில் பைனாகூலர் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
முகமதுகனி (சமூக ஆர்வலர்):- சிவகங்கை மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் என இது ஒன்று மட்டும் உள்ளது. இங்கு சீசன்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் பல வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இங்குள்ள வனத்துறை அலுவலகத்தில் எப்போதும் ஒரு வனக்காவலர் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பறவைகளின் இனம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேலும் பைனாகூலர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என்றார்.
நந்தினி (இயற்கை ஆர்வலர்):- வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இருப்பது உள்ளூர் மக்களுக்கு மட்டும் தெரியும் வகையில் உள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். இங்கு சேதமடைந்த சிறுவர் பூங்காவை புனரமைத்து புதிய வகையில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இந்த பகுதி சுற்றுலா பகுதியாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.