குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு மையம்


குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு மையம்
x

சேலம் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு பயிற்சி மையத்தை ஜெயில் சூப்பிரண்டு வினோத் திறந்து வைத்தார்.

சேலம்

சேலம் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு பயிற்சி மையத்தை ஜெயில் சூப்பிரண்டு வினோத் திறந்து வைத்தார்.

குழந்தைகள் காப்பகம்

சேலம் மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் வசதிக்காகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காகவும் சிறைத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகம் திறக்கப்பட்டது. தொடர்ந்து உடற்பயிற்சி நிலையமும் தொடங்கப்பட்டது.

அஸ்தம்பட்டியில் உள்ள சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கான பகல் காப்பகம், சிறப்பு கல்வி நிலையம் (டியூசன்), மருத்துவமனை மற்றும் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் குழந்தைகள் காப்பகம், சிறப்பு கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டார்.

சிறப்பு டியூசன் சென்டர்

இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறுகையில், சிறைத்துறை சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் தற்போது சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்காக பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டி தேர்வு பயிற்சி மையம், சிறப்பு கல்வி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் சிறைக்காவலர்கள் தங்களது குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் காப்பகமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இலவச சிறப்பு டியூசன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், துறை சிறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள், குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story