5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் டிக்கெட் எடுக்க தேவையில்லை -தமிழக அரசு உத்தரவு
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு போக்குவரத்து மானிய கோரிக்கையின்போது சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று அரசு பஸ்களில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்யும் அறிவிப்பாகும். இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி 5 வயதில் இருந்து 12 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அரசு பஸ்களில் முழு கட்டணத்தில் அரை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும். அதேபோல் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதேநேரத்தில் நகர மற்றும் மாநகர போக்குவரத்து கழக சேவையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிக்கலாம். இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சுமைக்கு கட்டணம்
மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் கண்டக்டர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு சுமை கட்டணம் வசூலிப்பது குறித்த விதிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
பஸ்களில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் 5 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான பயண கட்டணம் எது அதிகமோ அதனை கட்டணமாக வசூலிக்க வேண்டும். பஸ்களில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்க கூடாது.
அதேபோல் பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பஸ்சில் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. செய்தித்தாள்கள் மற்றும் தபால்களைக் கொண்டு செல்ல முன் அனுமதி பெறவேண்டும். இந்த சுற்றறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேற்கண்ட தகவல்களை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.