அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தொழிலாளர் உதவி அணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் தற்போது வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 491 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் ரூ.1000 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கான நலத்திட்ட உதவிகளை வருகிற மே மாதம் 31-ந் தேதிக்குள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அரசின் நலத்திட்ட உதவித்தொகையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், செங்குளம் காலனி மன்னார்புரம் திருச்சி என்ற முகவரியில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.