குழந்தை திருமணங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது-மாநில மகளிர் ஆணைய தலைவர் தகவல்


குழந்தை திருமணங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது-மாநில மகளிர் ஆணைய தலைவர் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்தார்.

முன்னோடி திட்டங்கள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றதிலிருந்து 23-வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டேன். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டும் திட்டம், குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவு தொகுப்பு வழங்கப்படும் திட்டம், கர்ப்பிணிகளின் இரும்பு சத்து குறைபாடுகளை நீக்குவதற்காக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் இரும்பு பெண்மணி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைந்துள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட தற்போது குழந்தை திருமணம் 25 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அரசு துறையில் 116 குழுக்களும், தனியார் துறையில் 78 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 60 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 26 புகார்களில் 7 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 19 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 6 மாதங்களில் பெண்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால் அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது. விழிப்புணர்வை அதிகரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மாவட்டத்தில் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மாயமாகும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். மேலும் இதனை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும். பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வரும் நிகழ்வுகளை தவிர்க்க தாமதமில்லா நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி ஆய்வு மேற்கொண்டார்.


Next Story