பச்சிளம் ஆண் குழந்தை திடீர் சாவு
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குழந்தை சாவு
ஓசூர் அருகேயுள்ள பேகேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா பிரசவத்திற்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே குழந்தை, ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. சுகபிரசவத்தில் பிறந்த குழந்தை, நேற்று திடீரென இறந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர்களுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் கவாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். குழந்தை இறந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.