தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு
ஊத்துக்குளி அருகே தந்தை வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
ஊத்துக்குளி அருகே தந்தை வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3½ வயது குழந்தை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையம் ஊராட்சி பெட்டிக்கடை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் தனது மனைவியை பிரிந்து தனது 3½ வயது குழந்தை சித்தேஸ்வரனுடன் வசித்து வருகிறார். பெட்டிக்கடை அருகில் உள்ள கிரைண்டர்கள் தயாரிக்கும் லேத் பட்டறையில் சுப்பிரமணி பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் பணிக்குச் செல்லும் போது தனது குழந்தை சித்தேஸ்வரனை உடன் அழைத்துச் சென்றார். சுப்பிரமணி வேலையை கவனித்துக்கொண்டிருந்தபோது சித்தேஸ்வரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு
வேலையில் முழு கவனத்தையும் செலுத்திய சுப்பிரமணி சில மணி நேரம் கழித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காணாமல் தேடினார். அருகிலிருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் சித்தேஸ்வரன் மூழ்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக சித்தேஸ்வரனை மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு சுப்பிரமணி கதறி அழுதார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பணிபுரியும் இடத்தில் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.