அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு..!


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு..!
x

கிண்டி,செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் ரூ.2877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் லிட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதனை கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசுதொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று துவக்க விழாவிற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் 30.06.2023 க்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் கொ.வீர ராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், பொதுப்பணித் துறை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story