கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறையன்பு ஆய்வு; மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறையன்பு ஆய்வு; மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு

தலைமைச்செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழை நீர் தேங்கிய இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இனிவரும் காலங்களில் பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

அதைத்தொடர்ந்து, நன்மங்கலம் ஏரி பகுதி, ரேடியல் சாலை, புத்தேரி ஏரியிலிருந்து கீழ்கட்டளை ஏரி வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கால்வாய் பணி மற்றும் சேலையூர் ஐ.ஏ.எப். சாலை-அகரம் தென் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய், பீர்க்கன்காரணை ஏரி உபரி நீர் செல்லும் மழைநீர் கால்வாய் பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், வெள்ள பாதிப்பு ஏற்படும் டி.டி.கே. நகர் பகுதி, பாப்பன் கால்வாய், அடையாறு ஆறு ஆகிய பகுதிகளில் அவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் எம்.எல்.ஏ., தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் கவிதா மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

ரூ.85 கோடியில் திட்டம்

அப்போது தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பீர்க்கன்காரணை இரும்புலியூர் ஏரியிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் வெளியேறும் உபரி நீரால் கிழக்கு இரும்புலியூர் அருள் நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் மற்றும் மேற்கு பகுதியில் வாணியன்குளம் சக்தி நகர் டி.டி.கே.நகர் ரமணி நகர், மல்லிகா நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்குகிறது.

இதை நிரந்தரமாக தடுக்க வாணியன்குளம் பகுதியில் இருந்து டி.டி.கே. நகர் பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலை வழியாக அடையார் ஆற்றுக்கு வெள்ள நீர் செல்லும் வகையில் ரூ.85 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள கான்கிரீட் மூடு கால்வாய் பணிகளை திட்ட அனுமதி பெற்று உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Next Story