சென்னை போலீசாருக்கு முதல்-அமைச்சரின் 10 கட்டளைகள் - போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
பொதுமக்களின் நலனை மையமாக வைத்து, சென்னை போலீசார் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 கட்டளைகள் பிறப்பித்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்றி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.
10 கட்டளைகள்
சென்னை கோட்டையில் சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பொதுமக்களின் நலனை மையமாக வைத்து போலீசார் செயல்பட வேண்டும் என்று, பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதில் சென்னை போலீசார் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து 10 முக்கிய ஆலோசனைகளை அவர் தெரிவித்தார்.
1. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உயிர் மூச்சாக மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
2. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை நிலை நாட்டுவதை இலக்காக வைத்திருக்க வேண்டும்.
3. அந்த பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை கண்டறிந்து, அவர்களின் செயல்பாட்டை தடுக்க வேண்டும்.
4. அமைதியான சென்னை நகரில், குழப்பம் ஏற்படுத்த முடியுமா, என்று திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு இடம் அளித்து விடக்கூடாது. இதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
5. கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்ளை அறவே சென்னை நகரில் இருந்து ஒழிக்க வேண்டும்.
இரும்புக்கரம் கொண்டு..
6. எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் போதைப்பொருள் கலாசாரத்தை சென்னையில் வளரவிடக்கூடாது. இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
7. சாலை விபத்துகளால் உயிர் இழப்பு ஏற்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
8. இந்தநிலை மாறுவதற்கு காவல்துறை, நெடுஞ்சாலைதுறை, போக்குவரத்து துறை ஆகியவை ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளை குறைப்பது குறித்து உரிய ஆய்வு செய்து, அவற்றை நிறைவேற்றுவதில் முழு முயற்சியில் ஈடுபடவேண்டும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க...
9. சென்னையில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இதனை குறைப்பதற்கு ஒரு சிறப்பு செயல் திட்டத்தை உருவாக்கி, அதை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
10. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளிகூட சமரசம் இருக்கக்கூடாது. இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை உடனே கைது செய்வதோடு, கோர்ட்டில் முறையாக வழக்கு தொடர்ந்து, அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் உறுதியாக செயல்பட வேண்டும்.
போலீஸ் கமிஷனர் பேட்டி
முதல்-அமைச்சரின் இந்த முக்கியமான 10 ஆலோசனைகளை, 10 கட்டளைகளாக மனதில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் அதிரடி நடவடிக்கைகளில் உறுதியோடு ஈடுபடுவதாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
முதல் அமைச்சரின் 10 கட்டளைகளில் முதன்மையானது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை. இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரவு-பகல் பாராமல் என்னோடு தோள் கொடுத்து சக அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.
கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஷ்ரா கார்க் ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கையாள்வதில் தலைசிறந்த அதிகாரிகள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, சுதந்திரதினவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், திருப்பதி குடை ஊர்வலம் மற்றும் சமீபத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்பட்டதற்கு இது போன்ற நிகழ்வுகள்தான் சிறந்த உதாரணம். கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் போக்குவரத்து மேலாண்மையும் மேற்கண்ட நிகழ்வுகளில் சிறப்பாக கையாளப்பட்டது.
ரவுடிகள் ஒழிப்பு
ரவுடிகள் ஒழிப்பில் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை முக்கிய ரவுடிகள் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகள் 452 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
வாரந்தோறும் 10 குற்றவாளிகளுக்கு குறையாமல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் 112 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நிலுவையில் உள்ள முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் 12 சிறப்பு புலனாய்வு பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சிறப்பு புலன் விசாரணை குழுக்கள் தொடங்கப்பட்ட பிறகு 2,524 முக்கிய குற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு
கஞ்சா போன்ற போதைப்பொருள் ஒழிப்பிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரையில் 742 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,140 போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2,250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா சாக்லெட்டுகள், கஞ்சா கேக்குகள், கஞ்சா அல்வா போன்ற புதிய வகை போதைப்பொருட்களும் பறிமுதல் ஆகி உள்ளது.
12,442 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 56 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 87 வாகனங்கள் பறிமுதலாகி உள்ளது.
சொத்துகள் பறிமுதல்
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இதுவரை போதைப்பொருள் சம்பந்தப்பட்ட 797 வழக்குகளில் கைதான 1,749 குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் வங்கிகணக்குகள் விவரம் சேகரிக்கப்பட்டது. சட்டரீதியாக அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 853 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆவடியில் இது தொடர்பான விழிப்புணர்வு இரவு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டினர் சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இதன் மூலம் வசூலான 4.74 லட்சம் ரூபாய், குழந்தைகள் பாதுகாப்பு நல நிதியாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்
முதல்-அமைச்சரின் ஆணைப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மெகா முகாம்கள் மாதத்தில் ஒரு நாள் சென்னையில் 12 காவல் மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு முகாமில் நானே கலந்து கொண்டு பொது மக்களிடம் குறை கேட்டு மனுக்கள் வாங்கி வருகிறேன். இதில் வாங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2 முறை இதில் வாங்கப்பட்ட 1,841 மனுக்களில் 1,539 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இது தவிர எனது அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல், இரவு 7 மணி வரை பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. புதன்கிழமைதோறும் எனது அலுவலகத்தில் நானும் நேரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் வாங்குகிறேன். கடந்த 7 புதன்கிழமைகளில் வாங்கப்பட்ட 103 மனுக்களில் 60 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 43 மனுக்கள் மீது விசாரணை நடக்கிறது. போலீசாரிடமும் இதுபோல் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.
முதியோர்கள் குறைகள்
78 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகளை நேரில் அனுப்பி உரிய விசாரணை நடத்தி, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சமீபத்தில் அதுபோல பெறப்பட்ட 8 மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய...
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.10 முக்கிய சாலைகளில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரை பணி அமர்த்தி உள்ளோம். ஸ்பென்சர் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் பட் டுலாஸ் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றங்கள் மூலம் நெரிசலை சீர்செய்ய வழிவகை காணப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் நுண்ணறிவு போக்குவரத்து முறை, நவீன சாலை வளர்ச்சி திட்டம், வட சென்னையில் பிரத்யேகமாக நவீன போக்குவரத்து மற்றும் விதிமீறல் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் மாநகர பஸ்களின் டிரைவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல அறிவுரை வழங்கப்பட்டது. பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிரோன்கள் மூலம் கண்காணிப்பு
கூகுள் வரைபட நேரடி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, உடனுக்குடன் உரிய அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்து, நெரிசல் சரி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு டிரோன்களும் பயன்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முதல்-அமைச்சரின் 10 முக்கிய கட்டளைகளை நிறைவேற்றி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கான பாதுகாப்பில், சென்னை முதலிடத்தில் உள்ளது
பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது, என்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் 10 கட்டளைகளில் 10-வது கட்டளை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக உருவாக்கி உள்ள காவலர் உதவி செயலியை இதுவரையில் 52,262 பேர் தங்களது செல்போனில் பதவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலி மூலம் 1,397 அழைப்புகள் பெறப்பட்டு, உடனுக்குடன் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நிர்பயா திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என 50 ஆயிரம் பேருக்கு, தற்காப்பு கலைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 192 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவற்றில் 35 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
சிறார் பாதுகாப்பு பிரிவினர் 125 பிச்சை எடுத்த சிறுவர்களை மீட்டுள்ளனர். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர், காணாமல் போன 339 குழந்தைகளை இதுவரை மீட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தொடர்ந்து சிறப்பாக செயல்பட கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு கமிஷனர் கூறினார்.