'பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார்' - அமைச்சர் பெரியகருப்பன்


பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் - அமைச்சர் பெரியகருப்பன்
x

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்? அதுபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும். பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

2011-க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் 1 வருடம் தர வில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை. இப்போது தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story