கடலூரில் நிலக்கரிச்சுரங்கம் வராது என்று முதல்-அமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் - இப்தார் நிகழ்ச்சியில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


கடலூரில் நிலக்கரிச்சுரங்கம் வராது என்று முதல்-அமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் - இப்தார் நிகழ்ச்சியில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

‘‘கடலூரில் நிலக்கரிச்சுரங்கம் வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிக்க வேண்டும்'' என்று இப்தார் நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சென்னை

பா.ம.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஆன்-லைன் சூதாட்டத்துக்கு இன்று தடை போடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை செய்யவைத்ததே பா.ம.க. தான். இப்படி எவ்வளவோ விஷயங்களை பா.ம.க. சாதித்திருக்கிறது. ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் தான் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும். எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமையும். ஒத்த கருத்துள்ள கட்சிகளை கூட்டணி அமைத்து பா.ம.க. ஆட்சி அமைக்கும்.

அதேவேளை இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க. அரசு தான் என்றாலும், பல்வேறு போராட்டங்கள் மூலம் அதை கொண்டுவர செய்தது பா.ம.க. தான். எனவே அந்த இடஒதுக்கீடு குறித்த முழு விவரத்தை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு பா.ம.க. சிறுபான்மைப்பிரிவு தலைவர் ஷேக் முகைதீன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முகமது முனீர், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரகீம், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாலர் ஜெயினுலாபுதீன், சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா செயலாளர் முஜிபுர் ரகுமான் பாகவி, ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் தலைவர் சிக்கந்தர், மனிதநேய ஜனநாயக கட்சி செயலாளர் ஷபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூரில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக, 6 புதிய சுரங்கங்கள் தோண்டுவதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. விளை நிலங்களை அழித்து நிலக்கரி சுரங்கங்கள் நமக்கு தேவையில்லை. தஞ்சை மட்டும் தான் டெல்டா என்று எண்ணக்கூடாது. இதில் 3 சுரங்கங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லைக்குள் வருகின்றன. கடலூரை அழிக்கும் சூழ்ச்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. இந்த விஷயத்தில் மட்டும் ஏன் மறுப்பு தராமல் அமைதியாக இருக்கிறது. எனவே கடலூரில் நிலக்கரிச்சுரங்கம் அமைக்கப்படாது என்ற உறுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரவேண்டும். இல்லையெனில் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story