புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், ஜி.கே. மணி உள்ளிட்டோர் இன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாதிக் கொடுமையை சான்றோர்களே தவறு என்று உணரச் செய்து தனது கல்வியால் சட்டமும் கல்வியும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த மண்ணில் சாதிய பாகுபாடு தீண்டாமை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது, கண்டிக்கத்தக்கது.
எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் சமூகநீதி. சாதிய பாகுபாடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்து வருவதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது.
வேங்கைவயல் கிராமத்தில் நடந்தது கண்டிக்கத்தக்கது.. மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும் என்பதை மனதில் கொண்டு வாழ வேண்டும்.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி. கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவக்குழுவினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் உள்ளனர். தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலானாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு புதிதயாக தண்ணீர் நிரப்பட்டது.
கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கு ரூ. 2 லட்சம் செலவில் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு ஜனவரி 5 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது. அத்துடன் புதிய மேல்நிலைத் தொட்டி ரூ. 7 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாரி மூலம் தினசரி காலை, மாலை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது
இது போன்ற கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 70 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதியப்பாகுபாடு அங்கொன்ரும் இங்கொன்றும் இருப்பதை வேங்கைவயல் சம்பவம் காட்டுகிறது. அனைத்து கோவில்களிலும் சமூகநீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மிக கடுமையாக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.