தக்காளி விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் கவலைப்படவில்லை -ஜெயக்குமார் பேட்டி


தக்காளி விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் கவலைப்படவில்லை -ஜெயக்குமார் பேட்டி
x

தக்காளி விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் கவலைப்படவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில் உறுப்பினர் சேர்த்தல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 1 கோடியே 75 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்

வியாபாரிகளுக்கு, பொதுமக்களுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் தி.மு.க. ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.

ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுமக்கள், காவல்துறையை ஏளனப்படுத்துவதும், அடிமைப்படுத்தவும் செய்கிறார்கள். வியாபாரிகளை ஏளனப்படுத்தி, அவர்களிடம் வசூல் வேட்டையிலும் ஈடுபடுகிறார்கள். பணம் கொடுக்காதவர்களை மிரட்டவும் செய்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்.

தமிழகத்தில் மிகப்பெரிய சக்தி

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் மிகப்பெரிய சக்தி அ.தி.மு.க. என்பதை இந்தியாவே உணர்ந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. 26 பெரியதா? 38 பெரியதா? நாங்கள்தான் பலம் வாய்ந்த கூட்டணி. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை பெறும்.

சொகுசு வசதி

செந்தில் பாலாஜி ஒரு சிறை கைதி. இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தண்டச்செலவு ஏன்?.

என்னை சிறையில் அடைத்தபோது வெறும் தரையில்தான் படுத்தேன். குடிக்க தண்ணீர் கூட தரவில்லை. சிறையில் இருக்கும் விதிகளை விடவும் மோசமாகத்தான் நடத்தப்பட்டேன். செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதியுடன் முதல் வகுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அமைச்சர் முத்துசாமிக்கு வாழ்த்து

மேகதாது அணை விவகாரத்தில் மு.க.ஸ்டாலினால் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால் அவர் தைரியசாலி, திறமைசாலி கிடையாது.

டாஸ்மாக் நிறுவனத்தை மேம்படுத்தி, வருவாயை பெருக்க அமைச்சர் முத்துசாமி என்ன மாதிரி 'யூ-டேர்ன்' எல்லாம் போடுகிறார். குடிப்பதை நியாயப்படுத்தி, மேம்படுத்தி, குடிகார மாநிலமாக தமிழகம் உருவாகவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் முத்துசாமிக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவலை இல்லை

தக்காளி விலை உயர்வை குறிப்பிட்டு, ஜெயக்குமார் பேசியதாவது:-

விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது. வீட்டில் நான் தக்காளி சாதம் கேட்டதற்கு எனது மனைவி கிடையாது என்று சொல்லிவிட்டார். நடுத்தர மக்கள், ஏழை-எளியவர்கள் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் வகையில் இஞ்சி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதை பற்றி முதல்-அமைச்சர் கவலைப்பட்டாரா? இல்லவே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story