துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சென்றுள்ளார்.
வேலூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மார்ச் மாதம் 14-ம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை ரத்தநாள கசிவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சென்றுள்ளார். அங்கு சி.எம்.சி. மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் சென்ற ஸ்டாலின், துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவுக்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார். மருத்துவர்களிடமும் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது