ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ராணிப்பேட்டை வருகை தந்தார். அங்கு பாரதிநகரில் உள்ள ஜி.கே.ரெசிடென்சியில்‌ தங்கினார்.

முதல் அமைச்சரின் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உள்ளிட்டோர் மேற்பார்வையில், ஆயிரக்கணக்கான போலீசார் ராணிப்பேட்டை நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார். தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


Next Story