ஒரிசா பாலு மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஒரிசா பாலு மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட கடலியல் வரலாற்று ஆய்வாளரின் இயற்பெயர் சிவபாலசுப்ரமணி. இவருக்கு வயது 60. இவர் ஆமைகள் மூலம் நீர் வழித்தடம் குறித்தும், பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டது குறித்தும் கண்டறிந்தவர். குமரிக்கண்டம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரிசா பாலுவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரிசா பாலு மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-
"தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். ஒரிசா பாலு, தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல்வழியே தேடிக் கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர் ஆவார்.
தன்னலம் கருதாத தமிழ்நலம் காக்கும் அவரது உழைப்பும், ஆர்வமும் என்றும் மதிக்கப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.