தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் 2022 மே மாதம் 7-ம் தேதி, தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக நாளை (ஜூன் 6) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் திறந்துவைக்கிறார். மற்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.