மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மகளிர் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் நிலையத்துக்கே சென்று வாழ்த்து கூறியதுடன் அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

சென்னை,

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரை சந்தித்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.

காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பெண் போலீசார் மற்றும் முதல்-அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும் மரக்கன்றும் வழங்கினார்.

முன்னதாக வாழ்த்து பெற வந்த போலீசார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களை வழங்கினர். அப்போது டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு ஆர்.திருநாவுக்கரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.

புத்தகங்கள் பரிசு

அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு இருந்த பெண் போலீசார் அனைவருக்கும் அவர் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். மேலும், பெண் போலீசார் அனைவருக்கும் திருக்குறள் உள்பட புத்தகங்களை அவர் பரிசாக வழங்கினார்.

அதன் பின்னர் பெண் போலீசாருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இணை கமிஷனர் ரம்யா பாரதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்ப அதிர்ச்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகை குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடீர் வருகை எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் நாங்கள் இன்னமும் சிறப்பாக பணியாற்றுவதற்கான உத்வேகமாகவும் அமைந்தது. மகளிர் தினத்தன்று எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, எங்களது பணிக்கு மேலும் உத்வேகம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story