ஓணம் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து


ஓணம் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
x

ஓணம் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஓணம் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டு பெருவிழாவான திருவோணம் கொண்டாடப்பட இருக்கிறது.

அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும், புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடை திருவிழா ஓணம். 'மாயோன் மேய ஓண நன்னாள்' என சங்க இலக்கியமாம் மதுரை காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இந்த திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா.

வலிமை

கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. அத்தகைய திருநாளை தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது தி.மு.க. அரசு என்பதை இந்த தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பும், ஒற்றுமையும், சமத்துவமும், சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதை பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டு திருவிழாக்கள் அமையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சசிகலா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், டி.ஆர்.பாரிவேந்தர் உள்பட பலரும் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story