துறையூர் அரசு பள்ளி மாணவிக்கு முதல்-அமைச்சர் பாராட்டு


துறையூர் அரசு பள்ளி மாணவிக்கு முதல்-அமைச்சர் பாராட்டு
x

துறையூர் அரசு பள்ளி மாணவிக்கு முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

திருச்சி

துறையூர்:

துறையூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி லயஸ்ரீ. ஆசிரியர்களான சசிகுமார்-நாகேஸ்வரி தம்பதியின் மகளான இவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதை தவிர்ப்பதற்காக கால்நடைகளுக்கு விரைவில் பிரதிபலிக்கும் தோடு அல்லது பிரதிபலிக்கும் பட்டைகள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கை பயனுள்ளதாக இருப்பின், வாழ்த்து மடல் அனுப்ப வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சமூக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய மாணவி லயஸ்ரீயை பாராட்டியுள்ளதோடு, இரவு நேரங்களில் சாலைகளில் ஏற்படும் விபத்துகள், உயிர் சேதங்களை தடுப்பதற்கு கால்நடைகளுக்கு இரவில் ஒளிரும் காதணி அல்லது பிரதிபலிக்கும் பட்டைகள் அணிவிப்பது சிறந்த நடைமுறையாக இருக்கும் என்று தெரிவித்து, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும், சிறுவயதிலேயே அவர் மேற்கொண்டுள்ள இச்செயலையும் பாராட்டியுள்ளார். மேலும் யூனிசெப் அமைப்புக்கு கொரோனா நிதி வழங்கியது, அகில இந்திய வானொலியில் பத்து நிமிடம் உரையாற்றியது, அகர வரிசைப்படி தமிழ் ஆங்கில பழமொழிகளை தொகுத்து நூல் வெளியிட்டது என்று லயஸ்ரீயின் செயல்களை பாராட்டியதுடன், கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். லயஸ்ரீ இந்த ஆலோசனையை கூறியதற்காக மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story