சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதுடன், விளைநிலங்களிலும் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்காலிகமாக சீரமைப்பு
மேலும் சிதம்பரம் - கடலூர் பிரதான சாலையின் குறுக்கே செல்லும் தில்லையம்மன் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் ஒருபக்க சுற்றுச்சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கோவில் சுற்றுச்சுவரை தற்காலிகமாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கனமழையால் சிதம்பரம் ஓமகுளம், சி.தண்டேஸ்வரநல்லூர் ஆகிய பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வீடுகளை சுற்றிலும் தேங்கிய மழைநீரை, விரைந்து வெளியேற்றுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மழைநீர் வெளியேற்றம்
மேலும் கனமழை காரணமாக காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் இருந்து கோபாடி மதகு வழியாக மழைநீர் வெளியேற்றப்படுவதையும், திருநாரையூர் கிராம சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதையும், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.