மாவட்ட அளவில் வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்ய செஸ் போட்டி;122 பேர் பங்கேற்பு


மாவட்ட அளவில் வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்ய செஸ் போட்டி;122 பேர் பங்கேற்பு
x

சென்னையில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காண மாவட்ட அளவில் வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்ய போட்டிகள் நடைபெற்றது. இதில், 122 பேர் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

ஒலிம்பியாட் செஸ் போட்டிகள்

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை மாதம் 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளிடையே 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட செஸ் வீரர்-வீராங்கனைகள் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் செஸ் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர்-வீராங்கனையினர் என 2 பேர் தேர்வு செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை நேரடியாக காண்பதற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

122 பேர் பங்கேற்பு

இதற்கான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தால், பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. போட்டியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 வயதிற்குட்பட்ட 86 பள்ளி மாணவர்களும், 36 பள்ளி மாணவிகளும் என மொத்தம் 122 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று செஸ் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக லீக் முறையில் 9 சுற்றுகள் நடத்தப்படுகிறது. நேற்று 5 சுற்றுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 4 சுற்றுகளுக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டியில் முதலிடம் பெறும் வீரர்-வீராங்கனை பெரம்பலூர் மாவட்ட சாம்பியன் என்ற பெருமையுடன் தமிழ்நாடு அரசின் விருந்தினராக மாமல்லபுரத்தில் 3 நாட்கள் தங்கி 5 நட்சத்திர விடுதியில் நடைபெறும் சர்வதேச தரத்திலான இந்த போட்டியை நேரில் காணவுள்ளனர்.

பரிசு கோப்பைகள்

மேலும் அவர்கள் கிராண்மாஸ்டர்களுடன் விளையாடி, அவர்களிடம் உரையாடி செஸ் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் போட்டிகளில் முதல் 25 இடங்களை பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஒலம்பியாட், தமிழ்நாடு அரசு ஏ.ஐ.சி.எப். சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசு கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன், உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story