செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்; தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்; தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
x

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 1-7-2022 அன்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பஸ்களை கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.

முன்னேற்பாடு பணிகள்

இதனையடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகளின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பஸ்சிலேயே பயணம் மேற்கொண்டு, இப்போட்டியில் பங்குபெற உள்ள போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள் பயணிக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தார்.

நவீன விளையாட்டு அரங்கம்

மேலும், மின்வாரிய பணிகள், சுகாதார பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும், பூஞ்சேரி பகுதியில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட உள்ள நவீன விளையாட்டு அரங்கத்தையும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளையும் தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்.

விமான நிலையத்தில் ஆய்வு

மாமல்லபுரம் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை பார்வையிட்டு, அதன் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மாமல்லபுரம், பஸ் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான விளம்பர பணிகளை பார்வையிட்டார்.

மேலும், மாமல்லபுரம், கடற்கரை கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளையும், குளம் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கு வரும் போட்டியாளர்களை வரவேற்று அழைத்து செல்லக்கூடிய வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் செயலாளர் பரத் சிங் சவுகானுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டாா்.


Next Story