செஸ் ஒலிம்பியாட்: 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணிகள் வெற்றி


செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணிகள் அனைத்தும் வெற்றி பெற்றன.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அதிக புள்ளியை குவிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவிலும் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் களம் கண்டுள்ளன.

முதல் 3 சுற்றுகளில் இந்திய அணிகள் அனைத்தும் வெற்றிகளை குவித்தது. 4-வது சுற்றில் பெண்கள் பிரிவில் இந்தியா 3-வது அணியும், ஓபன் பிரிவில் இந்தியா 3-வது அணியும் முதல் தோல்வியை சந்தித்தன.

இந்த நிலையில் 5-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றியை அள்ளியது. இந்தியா 1 அணி 2½-1½ என்ற புள்ளி கணக்கில் ருமேனியாவை தோற்கடித்தது, ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, நாராயணன் ஆகியோர் தங்களது ஆட்டத்தில் டிரா செய்த நிலையில் மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகாசி 46-வது காய் நகர்த்தலில் பார்லிகிராஸ் மிர்சியாவை தோற்கடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதே போல் இந்தியா 2 அணி 2½-1½ என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் குகேஷ், அதிபன் வெற்றி கண்டனர். இதில் குகேஷ் 44-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன்ஷிப் சேலஞ்சர் வீரரான அலெக்சி ஷிரோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து கவனத்தை ஈர்த்தார்.

இந்தியாவின் சரின் நிஹில்-அன்டோன் குஜரோ டேவிட் இடையிலான ஆட்டம் 40-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. நட்சத்திர வீரர் அந்தஸ்தில் உள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சாண்டோஸ் லடாசா ஜைமிக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.சிலிக்கு எதிராக களம் இறங்கிய இந்தியா 3-வது அணியும் இதேபோல் 2½-1½ என்ற புள்ளி கணக்கிலேயே வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணி, பிரான்சை எதிர்கொண்டது. இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி ஆகியோர் டிரா செய்தனர். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய மற்றொரு இந்திய வீராங்கனை தானியா சச்தேவ் 38-வது காய் நகர்த்தலில் பிரான்சின் ஆன்ட்ரியாவுக்கு செக் வைத்து வெற்றியை சொந்தமாக்கினார். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் இந்தியா 2½-1½ என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

முந்தைய நாள் இந்தியாவின் 3-வது அணியை வீழ்த்திய ஜார்ஜியா நேற்று இந்தியா 2-வது அணியை 3-1 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. பிரேசில்-இந்தியா 3 அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஈஷா கர்வாடே, விஸ்வா வஸ்னவாலா ஆகிய இந்திய வீராங்கனைகள் டிரா செய்தனர். தமிழகத்தின் நந்திதா 33-வது காய் நகர்த்தலில் எதிராளியை சாய்த்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரதியுஷா போட்டா தோற்றதால் ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் 'டிரா' ஆனது

இதுவரை நடந்துள்ள 5 சுற்றுகள் முடிவில் பெண்கள் பிரிவில் இந்தியா 1, ஜார்ஜியா, ருமேனியா ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளன. ஓபன் பிரிவில் தோல்வியை சந்திக்காத இந்தியா 2, அர்மேனியா தலா 10 புள்ளிகளுடன் இணைந்து முதலிடம் வகிக்கின்றன. உஸ்பெகிஸ்தான், இந்தியா 1, அமெரிக்கா, கியூபா, ஈரான் ஆகிய அணிகள் தலா 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளன.

6-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.


Next Story