செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்: பிரதமர் மோடி போட்டோவை சேர்க்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி போட்டோவை சேர்க்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஒரு சில இடங்களில் இந்து முன்னணியினர் முதல்-அமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர். சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிச் சென்றனர்.
இதையடுத்து அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படம் மீது கருப்பு வண்ண ஸ்பிரே அடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீது இன்று மதியம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.