சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் செர்ரி பூக்கள்
கொடைக்கானலில் தற்போது செர்ரி பிளாசம் மரங்களில் இளம்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில் செர்ரி பிளாசம் எனப்படும் ப்ரூனஸ் மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது அந்த மரங்களில் இளம்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இலைகள் உதிர்ந்த நிலையில் கிளைகளை ஆக்கிரமித்து கொத்து, கொத்தாய் பூத்துள்ள இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியை சுற்றி செர்ரி பூக்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இந்த பூக்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுக்கின்றனர்.
செர்ரி பூக்களை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருங்காலத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் செர்ரி பிளாசம் மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.