கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த செர்ரி பூக்கள்


தினத்தந்தி 21 Oct 2023 3:00 AM IST (Updated: 21 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியை பலவிதமான இயற்கை நிகழ்வுகள் அழகுபடுத்தி மெருகேற்றி வருகின்றன. அதில் முக்கிய பங்களிப்பது செர்ரி பூக்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மரங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவில் செர்ரி பூ மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த மரங்களில் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இலைகள் உதிர தொடங்கும். செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதத்திலும் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்கி கவர்ந்திழுக்கும்.இந்தநிலையில் கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்போது செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

இதனால் பச்சை பசேலென காணப்படும் மலைகளுக்கு இடையே இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள செர்ரி பூக்கள் காண்போரின் கண்களை விரிவடைய செய்கிறது. மேலும் சுற்றுலா இடங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக்குலுங்கும் ெசர்ரி பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் செர்ரி பூக்களை பார்த்து ரசிப்பதுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story