வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் 219 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 6-ந்தேதி முதல் தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரத்தில் பூங்கா இயக்குனர் அலுவலகம் அருகே கோஷங்களை எழுப்பி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்தது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி போராட்டத்தின் போது உடனடியாக தனியாரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பூங்கா நிர்வாகம் ரத்து செய்து ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்கள் முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.