சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்டுகிறது; கடைவீதிகளில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்டும் நிலையில் கடைவீதிகளில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தியாகராய நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
பண்டிகை கால கூட்ட நெரிசலில் ஜேப்படி, வழிப்பறி திருடர்கள் புகுந்து கைவரிசை காட்டும் சம்பவங்களும் அரங்கேறுவது வாடிக்கையாக இருக்கிறது. எனவே தீபாவளி திருடர்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போலீசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
தியாகராய நகர் உள்பட அனைத்து கடைவீதிகளையும் போலீசார் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
செல்போன் மற்றும் பர்ஸ் போன்ற உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் தொடர்ந்து அறிவுரை வழங்க உள்ளனர்.
தீபாவளி போன்ற பண்டிகை கால கூட்ட நெரிசலில் வழிப்பறி, ஜேப்படி செய்து சிக்கிய திருடர்களின் புகைப்படங்களை தொகுத்து ஆங்காங்கே பேனராக போலீசார் வைத்துள்ளனர். மேலும் தீபாவளி திருடர்கள் மக்கள் கூட்டத்தில் புகுந்துவிட்டால் அவர்களை அடையாளம் காட்டும் 'பேஸ் டிடெக்' போன்ற நவீன கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட உள்ளன.
18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மக்கள் கூட்டத்தை கண்காணிப்பது, பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்து நெரிசலை சீரமைப்பது என இப்பணிகளில் 18 ஆயிரம் போலீசார் 'ஷிப்டு' முறையில் ஈடுபட உள்ளனர். மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 'டிரோன்'கள் மூலம் மக்கள் கூட்டத்தை போலீசார் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
கடை வீதிகளுக்கு உள்ளே செல்லும்போது பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மறைப்பதற்கு 'ஸ்கார்ப்' துணி வழங்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளிலும் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வணிகத்தை முன்னிட்டு தியாகராயநகரில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.