சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு


சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
x

பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால் சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

10 டி.எம்.சி. இருப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயலால் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடு என உயர்ந்து வந்தது. இதையடுத்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 10.133 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

தட்டுப்பாடின்றி குடிநீர்

கடந்த வாரம் 9-ந் தேதி நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 8.600 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. கனமழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் குடிநீர் ஏரிகளுக்கு 1.500 டி.எம்.சி. தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதே நாளில் 11 டி.எம்.சி.யை தாண்டி தண்ணீர் இருப்பு இருந்தது.

கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது என்றாலும், அடுத்த ஆண்டு முழுவதும் சென்னை நகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரி தெரிவித்துள்ளனர்.

முழு கொள்ளளவு

ஏற்கனவே பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்திலும் பலத்த மழை கொட்டி இருப்பதால் அங்குள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரம்பாக்ம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 3.164 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் வருகிறது.

புழல் ஏரி

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 2.776 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 390 கன அடி தண்ணீர் வருகிறது. 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1.081 டி.எம்.சி.யில் தற்போது 823 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 38 கனஅடி நீர் வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.ஆகும். இதில் 2.836 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரியிலிருந்து 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 2,150 கன அடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.


Next Story