சென்னை: மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர் ஆய்வு
மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நீர்நிலைகளில் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் 1,242 கி.மீ. நீளத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகாலின் மீதமுள்ள நீளத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சிக்குட்பட்ட 87,719 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் இதுவரை 37,023 எண்ணிக்கையிலான வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவளம் வடிநிலப் பகுதிகளில் 158 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 116 கி.மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் 760 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 553 கி.மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகாலுடன் சேர்ந்து, பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தென்னக ரெயில்வே துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, அனைத்து துறைகளின் தொடர்புடைய அலுவலர்களும் விரைந்து பணியாற்றுமாறு உத்தரவிட்டார்.