சென்னையில் போலீசார் வாகன சோதனையில் 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
சென்னையில் போலீசாரின் வாகன சோதனையில் 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோவில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாகன சோதனை
சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அம்பேத்கர் கல்லூரி எதிரில் நேற்று முன்தினம் இரவு எம்.கே.பி.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து, அதில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவை சோதனை செய்தனர்.
2 கிலோ தங்க நகை
அந்த ஆட்டோவில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் இருந்தன. ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் போலீசார், இரவு ரோந்தில் ஈடுபட்ட கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் அவரை ஒப்படைத்தனர்.
அவர், கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூராம் (வயது 24) என்பதும், இவர், சென்னை சவுகார்பேட்டையில் தங்கி இருப்பதாகவும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தங்க நகைகள் வாங்கி வருவதாகவும், அதனை சவுகார்பேட்டையில் உள்ள நகை கடையில் கொடுக்க கொண்டு செல்வதாகவும் கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் 2 கிலோ தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி துறையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.