பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம்; 300 பேர் கைது
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை ஒன்றிணைந்து 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 346 நாட்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
கள ஆய்வுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் களஆய்வுக்கு வருகை தரும்பேராசிரியர் மச்சேந்திரநாதன் ஆய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ஆய்வு குழுவினர் ஆய்வு செய்வதை அறிந்து கிராம மக்கள் ஆவேசமடைந்து ஆய்வு குழுவை தடுத்து நிறுத்த ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
கைது
பரந்தூர்- மதுரமங்கலம் சாலையில் ஊர்வலமாக சென்ற கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊர்வலமாக சென்ற கிராம மக்களுக்கும் போலீசருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்ற கிராம மக்கள் 300 பேரை போலீசார் கைது செய்து வல்லக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இருப்பினும் அதிகாரிகள் குழுவினர் மாற்று பாதையில் சென்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி வழிநெடுக்கிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.