சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு சர்வதேச விருது; தங்க பதக்கத்துடன் ரூ.2 கோடி பரிசு..!
சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தலப்பில் பிரதீப்புக்கு, மதிப்புமிக்க 'இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர், குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, மலிவு விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தண்ணீரை வழங்கியது. அதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் பேராசிரியர் பிரதீப் மற்றும் அவருடைய குழுவுக்கு விருதுடன் ரூ.2 கோடி ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதில் பேராசிரியர் பிரதீப்புக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே பேராசிரியர் பிரதீப், பத்மஸ்ரீ மற்றும் நிக்கேய் ஆசிய விருது பெற்றவர். இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் 1 கோடியே 20 லட்சம் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.