தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு வரும் 28-ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 12-ம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22-ம் தேதி முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்டில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
எந்த பாதையில் இவர்கள் ஊர்வலம் செல்கிறார்கள் என்று முழுமையான தகவலை அளிக்கவில்லை. ஊர்வலத்தின் போது கோஷம் எழுப்பக்கூடாது, காயம் ஏற்படுத்தும் எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
மேலும், சட்டம் ஒழுங்கு, மதநல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான எந்த ஒரு உறுதியையும் அவர்கள் வழங்கவில்லை. இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தார் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பொதுக்கூட்டம் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இதுபோன்ற ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாமே தவிர, அதற்கு அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வரும் 28-ம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனை குறித்த விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.