சென்னை ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இரவு 8 மணி வரை மூடல்


சென்னை ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இரவு 8 மணி வரை மூடல்
x
தினத்தந்தி 18 Nov 2023 11:58 PM IST (Updated: 19 Nov 2023 6:05 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் 24 மணி நேரத்துக்கு இழுத்து மூடும்படி ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் ஹரி அறிவிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் தினமும் வக்கீல்கள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். இதனால், ஐகோர்ட்டு வளாகம் முழுவதையும் பொதுமக்கள் உரிமை கோரக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும், நவம்பர் மாதம் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரமும் ஐகோர்ட்டு அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும். இதன்மூலம், இந்த ஐகோர்ட்டு வளாகம் யாருக்கும் சொந்தம் இல்லை என்பதை அறிவிக்கப்படுகிறது.

இந்த சொத்து ஐகோர்ட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமையை நிலைநாட்டப்படுகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டும் ஐகோர்ட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் 24 மணி நேரத்துக்கு இழுத்து மூடும்படி ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் ஹரி அறிவிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, இன்று இரவு 8 மணிக்கு ஐகோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் இழுத்து மூடப்பட்டன. இந்த நுழைவு வாயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும். இந்த 24 மணி நேரத்தில், ஐகோர்ட்டுக்குள் யாரும் செல்ல முடியாது. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் தங்கியிருக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. அனைத்து வாயில்களையும் இழுத்து மூடி, ஐகோர்ட்டு முழுவதுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.


Next Story