விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்


விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Oct 2024 7:45 AM GMT (Updated: 7 Oct 2024 8:04 AM GMT)

குப்பைகளை அகற்றும் பணியில் 128 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. வானில் போர் விமானங்கள் நிகழ்த்திய வர்ணஜாலத்தை லட்சக்கணக்கான மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கும் சிறு குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்பட்டன.

128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story