சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு


சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது.

சீத்தாப்பழம்

பொதுவாக சீத்தாப்பழத்தில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவைகள் உள்ளன. சீத்தாப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பு குறைந்து இதய நோய் குணமாகும். ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களும் நீங்கும். சோர்வாக காணப்படும் குழந்தைகள் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறுவார்கள். கர்ப்பிணிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிசுக்கு நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும் என்பதால் சீத்தாப்பழத்தை பலர் விரும்பி சாப்பிடுவார்கள்.

சீத்தாப்பழம் மரங்கள் பொதுவாக மலைப்பகுதிகள் மற்றும் வேலி ஓரங்களில் வளர்ந்து காணப்படும். இதற்கென எந்தவொரு முதலீடு, பாதுகாப்பு செய்வது கிடையாது. வயல்வெளி மற்றும் காடுகளில் காணப்படும்.

போதிய விளைச்சல்

இந்த சீத்தாப்பழங்கள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் விளைச்சலுக்கு வரும். மேலும் எஸ்.புதூர் பகுதிகளில் விளையும் சீத்தாப்பழத்திற்கு தனி மனம் மற்றும் தனி சுவை உண்டு. எஸ்.புதூர் பகுதிகளில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் சீத்தாப்பழம் சிறிய அளவிலும், போதிய விளைச்சல் இல்லாமலும் உள்ளது.

இதன் காரணமாக கொள்முதல் விலை ஏற்றம் அடைந்து கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் சந்தையில் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாக சீத்தாப்பழம் சேகரிப்பாளர்கள் கூறினர்.


Next Story