செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு
திண்டுக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி, வினாடி-வினா, மாரத்தான் ஓட்டம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை பேகம்பூர் புறவழிச்சாலையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதில் கலெக்டர் விசாகன் ஜோதியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளிடம் வழங்கினார். இதையடுத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஜோதியை ஏந்தியபடி ஓடினர்.
மலர்தூவி வரவேற்பு
இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனி சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளி வழியாக எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. அப்போது சாலையின் இருபக்கத்திலும் மாணவ-மாணவிகள் வரிசையாக நின்று மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கு நடந்த விழாவில் கலெக்டரிடம், ஜோதி ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து கலைநிகழ்ச்சிகள், தற்காப்பு கலை வீரர்களின் நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது. இதில் கலெக்டர் பேசுகையில், இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 67 பேர் உள்ளனர். அதில் 24 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் மனதை வலுப்படுத்தும் விளையாட்டு ஆகும். மாணவர்கள் தங்களுடைய பலத்தை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். பலவீனத்தை போக்க வேண்டும், என்றார்.
சென்னைக்கு அனுப்பி வைப்பு
இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு அனுப்பி வைக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வனஅலுவலர் பிரபு, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், பள்ளி தலைவர் டாக்டர் மதிசெல்வன் மற்றும் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.