வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் சோதனை நடத்த வேண்டும்


வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் சோதனை நடத்த வேண்டும்
x

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாகன சோதனை வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாகன சோதனை வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

வணிகர் சங்க கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மேற்கு மாவட்ட கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர் - செங்கோட்டை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை விரைந்து சேர்க்க வேண்டும்.

இடைத்தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் வாகன சோதனை செய்ய வேண்டும். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் போர்க்கொடி தூக்குவதை ஏற்க முடியாது.

நீதிமன்றம் புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தமிழக அரசு முடிவு அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி, வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பட்ஷி ராஜா வன்னியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story