புதிதாக 4 இடங்களில் சோதனை சாவடிகள்
ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி வழியாக கடத்தலை தடுக்க வேதாளை உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு புதிதாக 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி வழியாக கடத்தலை தடுக்க வேதாளை உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு புதிதாக 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
தீவிர கண்காணிப்பு
இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொடர்ந்து அந்த பகுதிகள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடத்தல் பொருட்கள் எந்த வழியிலும் செல்லாத வகையில் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய சோதனை சாவடி
அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மண்டபம், வேதாளை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம். அந்த பகுதிகளில் 4 இடங்களில் புதிய சோதனை சாவடிகள் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
மெயின் ரோடுகள் தவிர கிராம சாலைகள் வழியாக கடற்கரைக்கு செல்ல பல வழிகள் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த சோதனை சாவடிகள் அமைக்கப்படும். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் கடந்தகால குற்ற செயல்களை அடிப்படையாக கொண்டு 10 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்ற பதிவேடு தயார் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். கடத்தலை தடுக்க சென்ற போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படகுகளில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வைத்து கொண்டு எளிதில் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மீன்வளத்துறையுடன் இணைந்து படகுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட உள்ளது. இதுதவிர, வேதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாத படகுகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பறிமுதல் செய்யப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 7 சோதனை சாவடிகள் உள்ள நிலையில் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க சோதனை தீவிரப்படுத்தப்படும். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சோதனை சாவடி கிழக்கு கடற்கரை சாலையை தாண்டி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.