உல்லாசத்துக்கு அழைத்து பலரிடம் மோசடி செய்த கும்பல்: 2 பெண்கள் கைது
பழனியில் உல்லாசத்துக்கு அழைத்து பலரிடம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர், 40 வயது விவசாயி. இவருக்கும், சின்னாளப்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த பவித்ரா (24) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த விவசாயியும், பவித்ராவும் செல்போனில் பழகி வந்தனர்.
அப்போது பவித்ரா, விவசாயியிடம் நேரில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து 2 பேரும் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க முடிவு செய்தனர். ஆனால் பவித்ரா, விவசாயியிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.
இதற்கிடையே பவித்ரா கூறியதை உண்மை என்று நம்பிய அந்த விவசாயி சில நாட்களுக்கு முன்பு பழனியில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்தார். அப்போது தங்கும் விடுதி அறையில் பவித்ராவுடன் மற்றொரு பெண்ணும் இருந்தார். பின்னர் 3 பேரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பவித்ராவின் ஆண் நண்பர்கள் 3 பேர் விடுதி அறைக்குள் திட்டமிட்டபடி நுழைந்தனர்.
பின்னர் 2 பெண்கள் உள்பட 5 பேரும் சேர்ந்து அந்த விவசாயியை அடித்து உதைத்தனர். தொடர்ந்து விவசாயியை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு அவர்கள் தப்பி சென்றனர்.
மறுநாள் பணம் பறித்த கும்பல், விவசாயியிடம் பேசி, பெண்களுடன் தனிமையில் இருந்ததை கேமராவில் வீடியோ எடுத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோசடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் விவசாயியிடம் பணம் பறித்த கும்பல் பழனி பகுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் கும்பலை சேர்ந்த பவித்ரா மற்றும் திண்டுக்கல் சேர்ந்த காமாட்சி (25), அவர்களின் ஆண் நண்பர்களான குணசேகரன் (40), லோகநாதன் (28), பாலமுருகன் (37) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 செல்போன்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.