பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு


பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக  சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 May 2024 3:05 PM IST (Updated: 15 May 2024 3:48 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை 'சைபர் கிரைம்' போலீசார் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கோவை 'சைபர் கிரைம்' போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கரை கைது செய்யும்போது, அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் 2-வது வழக்கை பதிவு செய்தனர். அதிலும் அவர் கைதானார்.சேலம், திருச்சி போலீசார் சார்பிலும் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் ஏற்கனவே 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் அவர் கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.இந்த 2 வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் கடந்த 10-ந்தேதி அன்று கோவையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.சவுக்கு சங்கர் மீது தரமணி பெண் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா கொடுத்த புகாரின் பேரிலும், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக சி.எம்.டி.ஏ. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரையொட்டியும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீசார் சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 9-ந்தேதி சோதனை நடத்தினார்கள். சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தி 'சீல்' வைத்தனர். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்தார்.

இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.இதனையடுத்து நீதிபதி ஜெயபிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தினார்.


Next Story