பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையாட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையாட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இது பிரசித்தி பெற்ற குடவரை கோவிலாக கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு இந்த விழா வருகிற 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை மூலவர் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இரவு உற்சவர் கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 2-ம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், 3-ம் திருநாளில் பூத வாகனத்திலும், 4-வது நாள் கமல வாகனத்திலும், 5-வது நாள் இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ம் திருநாளான 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருநாள் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

முன்னேற்பாடு பணிகள்

இதேபோல் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 10-ம் நாள் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

விழா நடைபெறும் நாட்களில் கலை நிகழ்ச்சிகள் ஆன்மிக சொற்பொழிவுகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தற்போது கோவிலில் மின்விளக்கு அலங்கார பணிகள், சுவாமி வீதி உலா வரும் இடங்களில் பந்தல் அமைக்கும் பணிகள், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் என முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story