பாலசமுத்திரம் பெருமாள் கோவிலில் தேரோட்டம்


பாலசமுத்திரம் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2023 3:45 AM IST (Updated: 4 Sept 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

பாலசமுத்திரம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திண்டுக்கல்

பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 1-ந்தேதி அகோபில வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6.30 மணிக்கு வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதையடுத்து காலை 7.45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேரானது பாலசமுத்திரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story