ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றாலத்தில் சாரல் திருவிழா-கலெக்டர் ஆகாஷ் தகவல்
ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி பெற்று குத்துக்கல்வலசையில் இயங்கி வரும் தனியார் நைட்டீஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் நிறுவனம், இலத்தூர் மரச்செக்கு எண்ணை ஆலை, தென்காசியில் ஒரு பேக்கரி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அரசின் கடனுதவி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா? அந்த நிறுவனங்கள் எவ்வாறு இயங்குகின்றன? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் மலை வள பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து வழங்கும் அறிக்கையை வைத்து அந்த பகுதிகள் நீக்கப்படும். குற்றாலத்தில் வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் சாரல் திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டரை நைட்டீஸ் உற்பத்தி நிறுவன உரிமையாளர் ராஜலட்சுமி வரவேற்றார்.