போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை மாற்றம் - ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை மாற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு விட்டது.
சென்னை ஐகோர்ட்டில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த நரேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "என் வீட்டில் தங்கியிருந்த உறவினர் விஜயகுமார், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, அவருடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீசார், அந்த பெண்ணை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் கணவருடன் செல்ல மறுத்து தனியார் விடுதியில் தங்கினார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதால், எங்கள் குடும்பத்தையே அவ்வப்போது போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் துன்புறுத்தினர். மார்ச் 7-ந் தேதி அலுவலகத்தில் இருந்த என்னை அழைத்த ஆர்.கே.நகர் போலீசார், பின்னர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்தனர். தற்போது நான் ஜாமீனில் உள்ளேன்.
இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கை ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.கே.எம்.சம்சுநிஹார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி, இந்த போதைப்பொருள் வழக்கு நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு மாற்றுகிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.